தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் குறிப்பிடத்தக்கது. வங்க கடல் அலை தாலாட்டும் எழிலார்ந்த இடத்தில் இறைவன் இயற்கையாக தோன்றி கருணையுடன் காட்சி தருகிறார். உவரியில் பஞ்சப்பூதங்கள் ஐந்தும் இணைந்து அவற்றின் மொத்த அம்சமாக உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிப்பது பெரும்பாக்கியம். தன்னை நாடி வரும் பக்தர்கள் வாழ்வில் நலமும், செல்வமும் வழங்கி மனக்குறை அகற்றி தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் வைத்தியநாதனாக அருள்பாலிக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
மார்கழி மாதம் முழுவதும் சுயம்புலிங்க சுவாமியின் மீது சூரியஒளி விழும். இது சுவாமிக்கு சூரியன் அபிஷேகம் செய்வதை போல் காணப்படும். இந்த அரிய காட்சியை இன்றும் நாம் காணலாம். சிறப்பும், பெருமையும் வாய்ந்த உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கி. மீ தொலைவிலும், திசையன்விளையிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து (குலசை 20 கி.மீ) கடலோர மார்க்கத்தில் கன்னியாகுமரி செல்லும் வழியில் 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது...